துப்பாக்கியால் பேச சொன்ன யோகி : என்கவுண்டர் பற்றிய போலிஸ் ஆடியோ பதிவு

க்னோ

த்திரப் பிரதேச என்கவுண்டர் பற்றி காவல்துறையினர் பேசிய ஆடியோ டேப் வெளியாகி உள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதில் இருந்து குற்றவாளிகள் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.   இவ்வாறு குற்றவாளிகள் கொல்லப்படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்புக்கள் எழுந்து வருகின்றன.    ஆயினும் என்கவுண்டர்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.    தற்போது காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் பேசியதாக கூறப்படும் ஆடியோ டேப் வெளியாகி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் மௌராணிப்பூர் காவல் நிலைய அதிகாரி சுனீத் குமார் என்பவர் பல கொலைக்குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ள லேக்ராஜ் சிங் யாதவ் என்பவருடன் பேசியவைகளின் பதிவு இது என சொல்லப்படுகிறது.   அதில் சுனீத், “என்கவுண்டர்கள் ஆரம்பித்து விட்டன.   குற்றவாளிகளுடன் துப்பாக்கியால்தான் இனி பேச வேண்டும் என முதல்வர் யோகி கூறி உள்ளார்.

உன்னுடைய அலைபேசி அழைப்புக்கள் கண்காணிக்கப்படுகின்றன.  நீ உடனடியாக பாபினா சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக மாவட்ட தலைவரை உடனடியாக தொடர்பு கொண்டு உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்.  நீ ஒரு பெரிய குற்றவாளி.  நான் பலரைக் கொன்று வீசியுள்ளேன்.  நீ நல்லவன்.  கட்வுள் உன்னுடன் இருக்கிறார்.  அனால் எனது வரலாறு மோசமானது.” எனக் கூறுகிறார்.

இதற்கு லேக்ராஜ் சிங் எதுவும் பதில் அதிகம் பேசவில்லை.  தன்னைக் காப்பாற்றுமாறு இடையில் கெஞ்சுகிறார்.  அதைத் தவிர வேறு பேச்சில்லை.

இந்த ஆடியோ டேப்பில் குறிப்பிடப் பட்டதை பாஜக சட்டமன்ற உறுபினர் ராஜீவ் சிங் பரிச்சா மற்றும் பாஜக மாவட்ட செயலாளர் சஞ்சய் துபே ஆகியோர் மறுத்துளனர்.   தாங்கள் எந்த ஒரு என்கவுண்டர் விவகாரத்திலும் தலையிடவில்லை என தெரிவித்துள்ளனர்.

காவல் துறை சூப்பிரெண்ட் வினோத் குமார், “ஒரு காவல்துறை அதிகாரி ஒரு குற்றவாளியுடன்  பேரம் பேசுவது  போல் பேசியது மிகவும் தவறானது.  நாங்கள் அந்த காவல் நிலைய அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்.  இது குறித்து எங்கள் துறை விரைவில் விசாரணை செய்ய உள்ளது”  எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முதல்வர் யோகி தனது ஆட்சியில் 1142 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாகவும்,  அது தவிர 34 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 2744 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   ஆனால் எதிர்க்கட்சிகள் இவை அனைத்தும் போலி என்கவுண்டர்கள் எனக் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.