அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்திற்கு 1 மாதம் போலீஸ் காவல்: காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்

அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்திற்கு ஒரு மாத காலம் வரை போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். முதல் 31 நாட்கள், சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் திரண்டதால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டது. நேற்றுமுன்தினம் ஆகம விதிப்படி, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அத்திவரதருக்கு 60 கிலோ மூலிகை தைலம் பூசப்பட்டது.

அதன் பின்னர் 30 பட்டாச்சாரியார்கள் ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என்று பக்தி கோஷங்களை எழுப்பியபடி அத்திவரதரை சுமந்து சென்றனர். நள்ளிரவு 12¾ மணியளவில் அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள மண்டபத்தில் அத்திவரதர் சிலை சயனநிலையில் வைக்கப்பட்டது. அத்திவரதர் சிலையை சுற்றி கருங்கல்லால் ஆன 16 நாகர் சிலைகள் வைக்கப்பட்டன.

அத்திவரதரை குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கும்போது காஞ்சீபுரத்தில் பலத்த மழை பெய்தது. மழை நேற்று காலை வரை நீடித்தது. அத்திவரதர் சிலையை இந்த குளத்தில் இருந்து எடுப்பதற்கு முன்னர் அதில் உள்ள தண்ணீர் அருகில் உள்ள பொற்றாமரை குளத்திற்கு மாற்றப்பட்டது. அந்த தண்ணீரும் தற்போது குழாய் மூலம் அனந்தசரஸ் குளத்தில் விடப்படுகிறது குளத்தை சுற்றிலும் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு மாத காலம் போலீசார் கோவில் குளத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். அத்திவரதர் தரிசனத்தையொட்டி மூலவர் வரதராஜபெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்ததையடுத்து நேற்று முதல் பக்தர்கள் வரதராஜபெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வரதராஜபெருமாளை தரிசித்தனர்.