கோலாலம்பூர்

லேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இல்லத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

மலேசிய முன்னாள் பிரதமர் கடந்த 2009 முதல் அரசு சார்பில் நிதிநிறுவனம் ஒன்று  நடத்தி வந்தார்.   இதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.   இந்த நிறுவனத்தில் சுமார் 400 கோடி டாலர்கள் காணாமல் போனதாக சொல்லப் படுகிறது.   இந்த நிதி நிறுவனத்தின் 68.1 கோடி டாலர் நஜிபின் வங்கிக் கணக்குக்கு காரணம் இன்றி மாற்றப்பட்டுள்ளது. மீதிப் பணம் குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இது குறித்து நஜிப் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்.  அந்தக் குழு எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை.    தற்போது நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மகாதிர் முகமது பிரதமராகி உள்ளார்.  அவர் முந்தைய ஆட்சியில் நடந்த அனைத்து தவறுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன் படி இந்த ஊழல் வழக்கை  மலேசிய காவல்துறை கையில் எடுத்துள்ளது.  நேற்று முதல் முன்னாள் முதல்வர் நஜிப் இல்லம் உட்பட  ஐந்து இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

Photo courtesy : MALAYSIA KINI

சோதனையின்  போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவர் மனைவி இருவரும் கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.   அவர்கள் இல்லத்துக்கு செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.   அவர்கள் இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   எங்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த சோதனை நடைபெற்ற நாளான நேற்று நஜிபால் ஓரினச் சேர்க்கை குற்றத்துக்காக  தண்டிக்கப்பட்ட முன்னாள் துணை பிரதமர் அன்வர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது