ரன்வீர்ஷா- கிரண் ராவ் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு! சிலை தடுப்பு பிரிவு காவல்துறை அறிவிப்பு

சென்னை:

சிலை கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வரும் ஏற்றுமதி தொழில் அதிபர் ரன்வீர்ஷா, ஓட்டல் தொழில் அதிபர் கிரண்ராவ் ஆகியோர்  குறித்து துப்பு கொடுத்தால் ரூ.50 ஆயிரம்  பரிசு வழங்கப்படும் என்று சிறை தடுப்பு காவல்துறை அறிவித்து உள்ளது.

பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன்  வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தி தொடர் விசாரணையை தொடர்ந்து, அவரது  கூட்டாளியான ஏற்றுமதியாளர்  ரன்வீர்ஷாவுக்கு வீடு மற்றும் அவருக்கு சொந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டது.

இதைத்தொடர்நது, பிரபல ஓட்டல் அதிபர் கிரண் ராவ் என்பவரின் போயஸ்தோட்ட இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கிரண் ராவ் வீட்டில் மண்ணில் மறைக்கப்பட்ட கோயில் சிலைகள், தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.  ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகிய இருவருக்கும் போலீஸ் தரப்பில் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் சார்பில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், சிலைகளை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் இருந்தால் அதனை ஆதாரமாக கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டனர்.

ஆனால், ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதால் அவர்கள் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர்களை பிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைத்து விமான நிலையங்ளுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அவர்கள் இருவர் குறித்து துப்பு கொடுத்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் பரிசு சன்மானமாக வழங்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் 2 பேரும் பிடிபட்டால் சிலை கடத்தல் தொடர்பாக மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.