சினிமா பைரசியில் பிடிபட்டது ஆபாச வெப்சைட் அட்மின் தான் : போலீஸ் தகவல்!

--

சென்னை

மீபத்தில் தமிழ்கன் வெப்சைட் அட்மின் என பிடிபட்டவர் ஒரு ஆபாச வெப்சைட் அட்மின் என போலீஸ் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக தமிழ் திரைப்படங்கள் வெளியாகிய உடனேயே சில வெப்சைட்டுகளிலும் சட்ட விரோதமாக வெளியிடப்பட்டு விடுகின்றன.  இந்த சினிமா பைரசிக்கு சிறிய படங்கள், பெரிய படங்கள் என எந்த பாரபட்சமும் இன்றி அனைத்துப் படங்களும் வந்து விடுகின்றன.  இந்த வெப் சைட்டுகளில் முக்கியமான இரண்டு தமிழ் ராக்கர்ஸ்,காம் மற்றும் தமிழ்கன்,காம் ஆகும்  நடிகர் சங்கம், மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் இதற்காக பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

சமீபத்தில் வெப்சைட்டுகளில் ஐ பி முகவரியை வைத்து ஒரு வெப் சைட்டை கண்டு பிடித்தனர்.  அதன் அட்மின் கவுரிசங்கர் என்னும் திருப்பத்தூரை சேர்ந்த இளைஞர்.  அவரை திருவல்லிக்கேணியில் ஒரு இடத்துக்கு வரவழைத்து விஷால் மற்றும் அவர் ஆட்கள் போலீசிடம் ஒப்படைந்தனர்.   அவர் தமிழ்கன்.காம் வெப் சைட்டின் அட்மின் எனவும் இனி அந்த வெப் சைட்டில் எந்த புதுப் படமும் ஏற்றப்பட மாட்டாது என செய்திகள் வந்தன.

இந்நிலையில் தமிழ்கன் வெப்சைட்டில் நேற்று வெளியான “துப்பறிவாளன்” என்னும் விஷால் நடித்த தமிழ் திரைப்படம் அருமையான தரத்தில் தமிழ்கன்.காம் வெப் சைட்டில் வெளியாகி உள்ளது.   மேலும் ஒரு தகவலாக பிடிபட்ட கவுரிசங்கர் தமிழ்கன் மற்றும் தமிழ் ராக்கர்ஸ் வெப் சைட்டுகளுக்கு எந்த சம்மந்தமும் இல்லாதவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் “கவுரிசங்கர் நடத்தி வந்த வெப்சைட்டின் பெயர் தமிழ்கன்.இன் என்பதாகும்.  இந்த வெப் சைட்டில் தமிழ் திரைப்படங்கள் ஏற்றப்படுவதில்லை.  இதில் விளம்பரங்களும் ஒரு சில ஆபாசப் படங்கள் மட்டுமே உள்ளன.  இந்த ஆபாச படங்கள் மூலம் இவர் மாதத்துக்கு சில ஆயிரங்கள் வருமானம் ஈட்டி வந்துள்ளார்.  இவருக்கும் தமிழ்கன்.காம் மற்றும் தமிழ் ராக்கர்ஸ். காம் வெப்சைட்டுக்களுக்கும் சம்மந்தம் இல்லை.  இந்த இரு வெப் சைட்டுகளும் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படுகிறது.  கவுரி சங்கர் பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளார்.  நீதிபதி உத்தரவின் பேரில் இவரை மேலும் விசாரித்து வருகிறோம்” என கூறினார்கள்.

பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு அதிகாரி, “இது போல இணயத்தில் திரைப்படங்கள் வெளியிடுவது மூலம் பல லட்சம் வருமானம் இந்த வெப்சைட் அட்மின்களுக்கு கிடைத்து வருகிறது.   இவர்களை பிடிக்க முடியாததன் காரணம் இவைகள் இந்தியாவுக்குள் இல்லாமல் வெளி நாடுகளில் இருந்து இயங்குவது தான்.  தற்போதைய கைதுக்குப் பின்னும் அவர்கள் புதிய படங்களை வெளியிடுவதில் இருந்தே அவர்கள் தொடர்ந்து புதிய படங்களை வெளியிடுவார்கள் என்பது நன்கு தெரிகிறது” என தெரிவித்தார்.