தூத்துக்குடி

போராட்டக்காரர்கள் மீது வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் கூறி உள்ளார்.

நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவி உட்பட 11 பேர் மரணம் அடைந்தனர்.   இதற்கு நாடெங்கும் உள்ள பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.    இதை ஒட்டி காவல்துறை இயக்குனர் டி கே ராஜேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜேந்திரன் தனது அறிக்கையில், “தூத்துக்குடியில் திரேஸ் புரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.   விவிடி சிக்னல் அருகே அவர்களை தடுத்த காவல்துறையினரை கற்களை வீசி தாக்கினர்.   அத்துடன் பொதுமக்களின் சொத்துக்களையும் காவல்துறை வாகனங்களையும் தீ வைத்துக் கொளுத்தி உள்ளனர்.   காவல்துறையினரை தாக்கி  விட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி அவர்கள் சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அவர்கல் தீ வைத்து கொளுத்தினர்.  அலுவலக நுழை வாயில் மற்றும் கண்ணாடி ஜன்னல்களை சேதப்படுத்தினர்.  அதன் பிறகு ஆட்சியாளர் அலுவலகத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் அங்கிருந்து விரட்ட முயன்றனர்.

அவர்கள் அப்போதும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் வன்முறையில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.  தற்போது தூத்துக்குடி நகரின் பாதுகாப்புக்காக மேலும் காவல்துறையினர் முதல்வர் அறிவுறுத்தலின் படி ஈடுபடுத்தப்பட்டுளனர்.    அத்துடன் காவல்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.