சீனப்பட்டாசு விற்றால் குண்டர் சட்டத்தில் கைது!: சரத் வலியுறுத்தல்

சென்னை:

சீனப்பட்டாசு நமது நாட்டுக்குள் நுழைந்துவிடாமல் இருக்க பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“மேக் இன் இந்தியா கோஷத்தை அன்றாடம் முழங்கவரும் பாரத பிரதமர் மோடி, சீனப்பட்டாசு ஒரு ரூபாய் அளவுக்குக் கூட நாட்டிற்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அரசும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து சீனப்பட்டாசுகள் விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். முறை தவறி சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்வோரையும் விற்போரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

பொதுமக்களாகிய நாமும் சீனப்பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்.  பட்டாசு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான நமது சகோதர சகோதரிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்துவிடக்கூடாது” என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.