மாணவர்களின் ‘கத்தி’ கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுமா காவல்துறை? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னை,

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பட்டா கத்தியுடன் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த ‘கத்தி’ கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று காவல்துறையினருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு  ரயிலில் கத்தியுடன் உலா வந்த மாணவர்கள், ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் கத்தியை தேய்த்து பொறிபரக்க வைத்து பயமுறுத்திய நிலையில், தற்போது பேருந்திலும் பட்டாக்கத்தியை ரோட்டில் தேய்த்து பொறி பறக்க வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பாரிமுனையில் இருந்த கானோடை பகுதிக்கு செல்லும் 57எப் பேருந்தில் சென்ற மாநில கல்லூரி மாணவர்கள் சிலர்,  ஓடும் பேருந்தின் படிக்கட்டில் நின்றுகொண்டு கையில் பட்டாக்கத்தியுடன் ரோட்டில் உரசி பொறி பறக்க வைத்து, பேருந்தில் பயணம் செய்தவர்களிடமும், ரோட்டில் பயணம் செய்துகொண்டிருந்த பொதுமக்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி  உள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மாணவர்களிடையே பரவி வரும் இந்த ‘கத்தி’ கலாச்சாரத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று காவல்துறையினருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றபோது, மாணவர்களை காவல்துறையினர் மன்னித்து விட்டுவிட்டதாக கூறப்பட்டது., மன்னிப்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான்  மாணவர்கள் இதுபோன்ற அடாவடித்தனத்தை மீண்டும் மீண்டும் செய்வது வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

படிக்கும் மாணவர்கள் புத்தகத்தை கையில் பிடிக்க வேண்டும். ஆனால் அவர்களோ கத்தியை கையில் பிடித்துள்ளார்கள்.

இதுபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபடும்  மாணவர்களின் கைகளை உடைக்க வேண்டும் என்றும்.. அவர்கள் மேற்கொண்டு படிக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ரெயிலில் பட்டாக்கத்தியுடன் பயமுறுத்திய மாணவர்கள்

கல்லூரிகளில் அதிகரித்து வரும் அரசியல் மற்றும் சாதி பாகுபாடு காரணமாக ஒரே கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கிடையே மோதல்… ஒரு கல்லூரிக்கும் மற்றொரு கல்லூரிக்கும் இடையேயான மோதல் மற்றும் பஸ்டே என்ற பெயரில் பொதுமக்களை தொல்லைப்படுத்தும் சம்பவம் போன்றவற்றை அரசும், காவல்துறையும் பாரபட்சமின்றி ஒடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாணவர்கள் மனதில் அதிகரித்து  வன்முறை சம்பவங்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி வருகிறது.. இந்த விஷயத்தில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை காவல்துறை இந்த மாணவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது…. அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளுமா? அல்லது எப்போதும் போல மன்னிப்பு என்ற ஒரே வார்த்தையை கேட்டுவிட்டு… அவர்களை அப்படியே விட்டுவிடுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்… பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…