சென்னை:

சென்னையில் காவல்ஆய்வாளர், மின்வாரிய ஊழியருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோயம்பேடு வணிக வளாகத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பரவியிருந்தது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காத நிலையிலேயே கொரோனா பரவல் தீவிரமாகி வருவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி உள்ளது.

இதையடுத்து கோயம்பேடு மார்கெட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,   கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் பணியாற்றிய காவல்நிலையம், அவருடன் பணியாற்றியவர்கள், அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அதுபோல கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள மேலும் 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மேலும், சென்னை, கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அவருடன் பணியாற்றிய மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.