சாதி சான்றிதழைத் திருத்தி பணி வாய்ப்பு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த சிக்கல்..

காவல்துறையினருக்கு இது போதாத காலம் போலத்தெரிகிறது.  23 வருடங்களுக்கு முன்பு சாதி சான்றிதழில் மற்றும் தந்தை பெயரை மாற்றி காவலர் ஒருவர் பணியில் சேர்ந்த விசயம் இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தெரியவந்துள்ளது.  இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் போலீசார் அவர் மீது  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் போலியான சாதி சான்றிதழ் மற்றும் தந்தை பெயரை மாற்றி ஆவணங்கள் தயார் செய்து, கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி அபிராமம் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.  இவர் தொடர்ந்து பணியிட மாறுதலும் பதவி உயர்வும் பெற்று மதுரையில் தலைமைக் காவலராகப் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில், அவரது மோசடி செயல் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்தியேக எண்ணிற்கு ஒரு ரகசியத் தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எஸ்.பி வருண்குமார் உத்தரவின் பேரில், காவலர் முருகனிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடி உண்மையென்பது கண்டறியப்பட, ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கழித்து, போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– லெட்சுமி பிரியா