சென்னை:

சென்னை ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியவர் அருண்ராஜ் (வயது 25). இவர் சென்னையில் உள்ள மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவின் சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். ‘ஷிப்டு’ முறையில் நான்கு மணி நேரம் இவர் பாதுகாப்பு பணியில் இருப்பார்.  அதனடிப்படையில் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இவருக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி பாதுகாப்பு பணியில் துப்பாக்கியுடன் ஈடுபட்டு இருந்தார். அவரோடு மேலும் மூன்று காவலர்கள்  துப்பாக்கியோடு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில்  நேற்று அதிகாலை 5 மணியளவில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அருண்ராஜ் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து சென்னை காவல்துறை ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் சாரங்கன், இணை ஆணையர் அன்பு, து ஆணையர் பர்வேஸ்குமார், உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் ஆகியோர் துப்பாக்கி சூடு நடந்த ஜெயலலிதாவின் சமாதிக்கு விரைந்து சென்றனர். நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்கள்.
கடந்த வாரம்தான் ஆவடியில் மத்திய துணை ராணுவப்படை பயிற்சி போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அருண்ராஜ் பி.காம் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, விளையாட்டு ஒதுக்கீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார். அவர் திருமணம் ஆகாதவர். தீவிர ஆன்மிகவாதி. சிவ பக்தர். கடந்த 2016-ம் ஆண்டு திடீரென்று காணாமல் போய்விட்டார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அவர் காவி உடை அணிந்தநிலையில் காணப்பட்டார். அங்கிருந்து அவர் மீட்டு வரப்பட்டார். மீண்டும் காவல் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். அவர் தனக்கு குடும்ப வாழ்க்கை பிடிக்கவில்லை என்றும், இறைபணிக்கு தன்னை அர்ப்பணித்து கொள்ளப்போவதாகவும் தனது நண்பர்களிடம் கூறி வந்தது தெரியவந்துள்ளது.