போலியோ சொட்டு மருந்து கைவசம் இல்லாததால் மருந்து வழங்குதல் நிறுத்தம்

டில்லி

போலியோ சொட்டு மருந்து கைவசம் இல்லாததால் வரும் பிப்ரவரி மாதம் குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்குவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வருடம் தோறும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து அரசால் முகாம்கள் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.    இந்த மருந்து அளிக்கப்பட்டதால் தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் போலியோ  என்னும் இளம்பிள்ளை வாதம் இல்லாத மாநிலம் ஆகி உள்ளன.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி இந்த முகாம் நடைபெறுவதாக இருந்தது.   இந்நிலையில் மத்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற இருந்தது.

தவிர்க்க முடியாத காரணங்களால் பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் இந்த முகாம்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன.   முகாம்கள் மீண்டும் நடைபெற உள்ள தேதிகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசிடம் தற்போது போதிய அளவு போலியோ தடுப்பு மருந்து கைவசம் இல்லாததால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தற்போது கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மட்டும் போதிய அளவு மருந்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.