கர்நாடக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய கோரும் அரசியல் தலைவர்கள்

மும்பை

ர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவை பதவி நீக்கம் செய்யுமாறு பல அரசியல் தலைவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை அரசு அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைத்தார்.   மேலும் பாஜகவின் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தார்.  இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பா உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.   ஆயினும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என அறிந்த எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

கர்நாடகா ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “கர்நாடகா ஆளுநரின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.    இந்த விவகாரத்தில் விலை போகாத காங்கிரஸ் மற்றும் மஜத உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  ஆளுநர் தனக்கு உரிய மரியாதையை தானே கெடுத்துக்கொண்டார்.   உடனடியாக மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், “காங்கிரஸ் கட்சியின் முயற்சியால் கர்நாடகாவில் ஜனநாயகம் காக்கப் பட்டுள்ளது.   பாஜகவுக்கு இது மிகவும் அவமானமான செய்கை ஆகும்.   அரசை கைப்பற்ற பாஜக எந்த ஒரு முடிவும் எடுக்கும் என்பதை மக்களுக்கு இந்த நிகழ்வு எடுத்துக் காட்டி உள்ளது.  பாஜகவுக்கு துணை போன ஆளுநரை பதவி நீக்கம் செய்யவேண்டும்” என கூறி உள்ளார்.

சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ரௌத், “எடியூரப்பாவின் ராஜினாமா சர்வாதிகார அரசியலுக்கு ஒரு முடிவை அளித்துள்ளது.    பாஜக எப்படியாவது  நம்பிக்கை வாக்கு பெற முயற்சி செய்தது ஜனநாயகத்துக்கு எதிரானது.   தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை எனினும் அரசு அமைக்கலாம் என்னும் ஆணவக்காரர்களுக்கு தற்போது அடி கிடைத்துள்ளது.   அடுத்த அடியாக வஜுபாய் வாலா வீட்டுக்கு அனுப்பபட வேண்டும்” என அறிக்கை விடுத்துள்ளார்.