
நீங்களே “ரௌத்ரம்” என்ற இதழைத் துவங்கினீர்களே..
ஆமாம்.. மக்களிடம் தொடர்பு வேண்டும்.. எங்களைப் பற்றிய செய்திகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக அந்த இதழு துவங்கினேன்.
அந்த இதழை துவங்கும்போதே “ ஜனரஞ்சகம் என்ற பெயரில் மக்களுக்கு போதையை அளிக்க நிறைய பத்திரிகைகள் இருக்கின்றன. அது போன்ற எந்த விஷயமும் இதில் இருக்கக்கூடாது” என்று சொன்னேன். அது போலவே நடத்தினோம்.
ஒரு இதழ் தயாரிக்க ஒரு லட்ச ரூபாய் செலவு ஆனது. பத்தாயிரம் ரூபாய் கட்டணத்தில் ஆறு விளம்பரங்கள் வாங்கலாம். மீதம் நாற்பதாயிரம ரூபாய்க்கு சந்தா வாங்கலாம் என்று நினைத்தோம்.
பல தொழில் அதிபர்களிடம், “எங்களது இதழில் மக்களுக்கான நல்ல விஷயங்களைச் சொல்கிறோம். விளம்பரம் தாருங்கள். வணிக ரீதியாக செயல்படும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளுக்கு கோடிக்கணக்கில் விளம்பரம் தருகிறீர்கள். எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் தாருங்கள் என்று கேட்டேன்.
தொழிலதிபர்களோ, “ நீங்கள் இலக்கிய இதழ் நடத்தினால் எவ்வளவு விளம்பரம் வேண்டுமானாலும் தரலாம். ஆனால் நீங்களோ மத்திய அரசை விமர்சிக்கிறீர்கள்.. மாநில அரசை விமர்சிக்கிறீர்கள். மற்ற பல தலைவர்கலையும் விமர்சிக்கிறீர்கள். உங்களுக்கு விளம்பரம் கொடுத்து, அவர்களின் விரோதத்தை சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை. தனிப்பட்ட முறையில் வேண்டுமானால், உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம்” என்றார்கள்.
ஆனால் அதை நான் மறுத்துவிட்டேன். நான் படித்த காந்தீயம், நான் பார்த்த காமராஜர் வழியில் நடக்க முயன்றேன். விளம்பரம் இல்லாமலேயே இதழை நடத்தினோம். ஒரு இதழுக்கு ஏறக்குறைய நாற்பது முதல் அறுபது ஆயிரம் ரூபாய் நட்டம் ஆனது.
என்னால் எந்த சுமையையும் தாங்க முடியும். ஆனால் பொருள் இழப்பை சமாளிக்க முடியாது. எவரிடமும் பிச்சை பாத்திரம் ஏந்தி நிற்கவும் விரும்பவில்லை. இதுதான் யதார்த்த நிலை.
அரசியலிலும் ஓய்வு பெறுவது அவசியம் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக..! எந்த ஒரு அரசியல்வாதியும் எழுபத்தியைந்து வயதில் ஒய்வு பெற்றுவிட வேண்டும். அவர் மிகச் சிறந்த நெறியாளராக இருந்தாலும் இந்த ஓய்வு அவசியம்.
அரசியல் தலைவர்கள் எழுபது வயதிலேயே, ஓய்வுக்கு மனதை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். விளாம்பழத்துக்கும் ஓட்டுக்கும் உள்ள உறவு போல தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும். தனக்கு அடுத்த தலைமையை உருவாக்குவதில் அந்த ஐந்து வருடங்களை செலவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு, கட்சியை வழி நடத்துபவராக, நெறியாளராக இருக்கலாம். மற்றபடி கட்சி பொறுப்பையோ, அரசு பொறுப்பையோ வகிக்க நினைக்கக் கூடாது.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
அன்றாடம் இயங்கக்கூடியது அரசியல். ஆறு போல அரசியலிலும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். தேங்கினால் சாக்கடை ஆகிவிடும். ஆகவே உடல் ஓடியாடி உழைக்கும் வகையில் இருக்கும் வரை அரசியலில் இருப்பதே சரி.
“என்னால் நடக்க முடியவில்லை, உட்கார முடியவில்லை “ என்றெல்லாம் புலம்பிக்கொண்டு, “ஆனால் நான்தான் தலைவராக இருப்பேன்” என்பது சரியல்ல.
நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
பேட்டி: டி.வி.எஸ். சோமு https://www.facebook.com/reportersomu
விமர்சனங்கள் உங்களை எந்த அளவுக்கு பாதிக்கின்றன..
உங்கள் கட்சியின் எதிர்காலம் என்ன.. அடுத்த தலைவர் யார்,
தேர்தல் என்பதை கடந்து வேறு வழியிலான மக்கள் பணி பற்றி..
இந்த சமுதாயம் பற்றி உங்கள் கருத்து என்ன
(தமிழருவி மணியன் பதில்கள் தொடரும்..)
Patrikai.com official YouTube Channel