Random image

கிரிமினல் தலைமை: அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதி மன்றம் அதிரடி நோட்டீஸ்…

டில்லி:

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிக்கலாமா என்பது குறித்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதி மன்றம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஊழல், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள்,  அரசியல் கட்சி தலைவர் பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம்,  இந்த வழக்கு குறித்து, விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வழக்கை ஆகஸ்டு 13ந்தேதிக்கு  ஒத்தி வைத்தது.

ஸ்வினி உபாத்யாயா ஏற்கனவே, குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்க தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்,  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின் படி குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சிறைத் தண்டனை முடிந்த பிறகு, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது.

இதை ரத்து செய்து,  குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும்,  இந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவினை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய அம்சங்களாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும், 4 சதவிகித சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த இந்திய தேர்தல் ஆணையம்.  குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என்று கூறியிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.