தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் சென்றனர். அப்போது கலவரம் ஏற்பட்டது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பத்து பேர் பலியானார்கள்.

இந்த துப்பாக்கிச்சூட்டை பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்?

1. சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு.

2. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை. காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ் நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா?

3.  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்த வர்களுக்கு என்னுடைய ஆறுதல் மற்றும் பூரண குணமடைய வாழ்த்து” என்று தெரிவித்துள்ளார்.

இன்னொரு பதிவில், “காவல்துறை துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல்கட்சி பா.ஜ.க.

தமிழ்நாட்டு அரசை யார் வழிநடத்துகிறார்கள் என்று இப்போது தெரிகிறதா” என்று பதிவிட்டுள்ளார்.