பனாஜி:

கோவாவில் காங்கிரசில் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்துள்ளது பகிரங்கமான அரசியல் விபச்சாரம் என்று கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் பாபு கவேல்கர் தலைமையில் 10 பேர் சமீபத்தில் பதவி விலகினர். அவர்கள் அனைவரையும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் டெல்லிக்கு அழைத்துச் சென்று,  அங்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் 10 பேரும் பாஜகவில் இணைத்துள்ளார்.

இதன் காரணமாக , கோவா சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இணைந்துள்ள எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் வகையில்,  சர்தேசாய் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில்,  காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ அலெக்சோ ரெஜினால்டோ லூரென்கோ, பாஜக கூட்டணி கட்சியான கோவா ஃபார்வர்ட் கட்சி (ஜி.எஃப்.பி) தலைவரும் துணை முதலமைச்சருமான விஜய் சர்தேசாயை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், கோவவில் தற்போது நடைபெற்றுள்ள நிகழ்வு, “அரசியல் விபச்சாரம்” என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.

கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், அதில் 10 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ள நிலையில், தற்போது, 5 எம்எல்ஏக்கள் மட்டுமே காங்கிரசுக்கு உள்ளனர். இவர்களில் லூரென்கோவும் ஒருவர்.