ஜெயலலிதா பாணியில் மோடி… கருணாநிதி தொணியில் நாயுடு… ஆந்திராவில் நிகழ்ந்த அக்கப்போர்..

ஜெயலலிதா பாணியில் மோடி… கருணாநிதி தொணியில் நாயுடு… ஆந்திராவில் நிகழ்ந்த அக்கப்போர்..

கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் இருந்தபோது சண்டை போட்டுக்கொண்ட மாதிரி பிரதமர் மோடியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நேற்று வார்த்தை போர் நடத்தி இருக்கிறார்கள்.

‘’கருணாநிதி குடும்ப அரசியல் நடத்துகிறார்’’ என்று அவ்வப்போது குத்திக்காட்டுவார் ஜெயலலிதா.’’ எனக்கு குடும்பம் இருக்கிறது.அதனால் குடும்ப அரசியல் செய்கிறேன்’’ என்று கருணாநிதி பதிலடி கொடுப்பார்.

அதே போன்றதொரு குத்தல் குற்றச்சாட்டும், பதிலடியும் ஆந்திராவில் நிகழ்ந்தேறியுள்ளது.

மோடி நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் புயல் வேக பயணம் மேற்கொண்டார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் –பழைய நண்பரும், புதிய விரோதியுமான சந்திரபாபு நாயுடுவை ‘உண்டு..இல்லை’ என வெளுத்து வாங்கிவிட்டார்.

நாயுடுவின் மகன் நர லோகேஷ்-அங்கு அமைச்சராகவும் இருக்கிறார்.

கட்சியிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.

அதனை விமர்சனம் செய்யும் வகையில் ’’நர லோகேஷின் தந்தை’’என்றே சந்திரபாபு நாயுடுவை குறிப்பிட்டார்- மோடி.

‘’தனது மகனை அரசியலில் வளர்த்து விடுவதில் தான் சந்திரபாபு நாயுடு கவலையாக இருக்கிறார். மாநிலத்தை மறந்து விட்டார்’’ என்று விளாசி விட்டு கர்நாடகம் பறந்தார்.

சில மணி கழித்து விஜயவாடாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடிக்கு பதிலடி கொடுத்தார்-சந்திரபாபு நாயுடு. பேச்சில் காரம் சற்று தூக்கலாகவே இருந்தது.

‘’என்னை தனிப்பட்ட முறையில் மோடி விமர்சித்துள்ளார். லோகேஷுக்கு தந்தையாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். லோகேஷின் தந்தை என்று அழைக்கப்படுவதை விரும்புகிறேன். ஆனால் ஜசோதா பென்னின் கணவர் என்பதில் பெருமை படுவதாக நீங்கள் (மோடி) சொல்ல முடியுமா?’’ என்று கூறி பேச்சை நிறுத்தியவர் மீண்டும் தொடர்ந்தார்.

‘’தனிப்பட்ட விஷயங்களை நான் தொடுவதில்லை.ஆனால் என்னை பற்றி தனிப்பட்ட முறையில் நீங்கள் பேசியதால் நானும் தனிப்பட்ட விஷயங்களை பேச நேர்ந்தது.’’ என்று கூறி ஆத்திரம் தணிந்தார்- நாயுடு.

பிரதமர் ஒரு மாநிலத்துக்கு சென்றால் அந்த  மாநில முதல்வரோ அல்லது அமைச்சரோ நேரில் சென்று பிரதமரை வரவேற்க வேண்டும் என்பது மரபாக உள்ளது. ஆனால் ,நேற்று ஆந்திரா வந்த மோடியை வரவேற்க , முதல்வரோ அல்லது அமைச்சர்களோ செல்லவில்லை .

–பாப்பாங்குளம் பாரதி

Leave a Reply

Your email address will not be published.