திர்க்கட்சிகளை வசீகரிக்கவும், வளைக்கவும் அறிஞர் அண்ணா  பயன்படுத்திய வார்த்தை ‘’ மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ என்பது.

தமிழகத்தை தாண்டி இந்த வார்த்தையை வேறு சில தலைவர்களும் பொன்மொழி யாக ஏற்றுக்கொண்டு- அடுத்த வீட்டு மல்லிகை பூக்கள் – தங்கள் வீட்டை அலங்கரிக்க பயன் படுத்த தொடங்கி உள்ளனர்.

வேறு ஒன்றும் இல்லை. சொந்த கட்சியில் சண்டை போட்டு விட்டு- கட்சி தாவும் வி.ஐ.பி.க்களை  உச்சி மோந்து வரவேற்கும் தலைவர்களை தான் இங்கே குறிப்பிடு கிறோம்.

கிரிக்கெட் மைதானத்தில் இருந்து வெளியேறிய பின் அரசியல் மைதானத்துக்கு வந்தவர் கீர்த்தி ஆசாத்.காங்கிரஸ் பரம்பரையை சேர்ந்தவர். அவர் தந்தை பகவத் ஷா ஆசாத்- பீகாரில் முதல்வராக இருந்தவர்.

வாஜ்பாய் மீதான நேசம் காரணமாக –பா.ஜ.க.வில் சேர்ந்தார்-கீர்த்தி. தர்பங்கா தொகுதி எம்.பி.யான அவர் கொஞ்ச நாட்களாகவே  பா.ஜ.க.மீது அதிருப்தியில் இருந்தார். நேற்று அவர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

காங்கிரசில் சேர்ந்த கையோடு பேட்டி அளித்த கீர்த்தி ஆசாத்’’ பா.ஜ.க.வில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. மோடியும், அமீத்ஷாவும் வைத்தது தான் சட்டம்’’என்று பொங்கினார்.

போகிற போக்கில் ஒரு தகவலையும் சொல்லி விட்டு போனார்.

‘’நான் காங்கிரசில் சேரும் தகவல்  அறிந்த சில பா.ஜ.க. தலைவர்கள் என்னை அணுகி ‘’நடந்ததை மறந்து விடுங்கள். மீண்டும் தர்பங்கா தொகுதியில் போட்டி யிட வாய்ப்பு தருகிறோம்’’ என்று ஆசை காட்டினார்கள். ஏன் தெரியுமா? பா.ஜ.க. அண்மையில் ஒரு சர்வே எடுத்துள்ளது. தர்பங்காவில் நான் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என்று அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது. அதனால் தான் என்னை கட்சியில் சேர்க்க விரும்பினர். நான் மறுத்து விட்டேன்” என்று கிளம்பி சென்றார்.

ஆந்திராவில் உள்ள மல்லிகை பூக்களுக்கு அதீத மணம் உண்டு போலும்.

அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு –பா.ஜ.க.கூட்டணியில் இருந்த போது –சர்வ சாதாரணமாக கட்சி தாவல் நடந்தது.ஒரே நேரத்தில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஒஸ்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் – தெலுங்கு தேசத்துக்கு குடிபெயர்ந்தார்கள்.

இப்போது –ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்  ஜெகன் மோகன் ரெட்டிக்கு குரு பெயர்ச்சி போலும். மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தான் வெல்லும் என்று கணிப்புகள் அனைத்தும் ஜெகனுக்கு சாதகமாக இருக்க – கட்சி தாவல் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோருமே நாயுடு ஆட்கள் தான்.

சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியின் அனகபள்ளி எம்.பி.யான அவந்தி சீனிவாஸ் –ஜெகன் கட்சியில் சேர்ந்தார்.

நேற்று அமலாபுரம் தொகுதி தெலுங்கு தேசம் எம்.பி.ரவீந்திர பாபு, ஜெகனை சந்தித்து ,தன்னை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசில் இணைத்து கொண்டார்.

நாயுடு கட்சியில் இருந்து – ஜெகன் கட்சிக்கு தாவ மேலும் சில எம்.பி.க்கள்-முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக ஒரு தகவல்.

–பாப்பாங்குளம் பாரதி