“அரசியல் என்பது பேசும் சக்தியாக மாறிவிட்டது; அறிவின் சக்தியாக அல்ல”

திருவனந்தபுரம்: முன்னாள் மத்திய அமைச்சரும், கம்யூனிஸ்ட் தலைவருமான இந்திரஜித் குப்தாவின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேர்தல் சீர்திருத்தம்’ என்ற தலைப்பிலான கருத்துப் பட்டறையில் கலந்துகொண்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சலமேஸ்வர், “அரசியல் என்பது வெறுமனே பேசும் சக்தியாக மாறிவிட்டது; அது அறிவின் சக்தியாக இருக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்திரஜித் குப்தா போன்ற நாடாளுமன்றவாதிகள் இருந்த நாட்டில், இன்றைய நிலையே முற்றிலும் மாறிவிட்டது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த யுகத்தின் பண்பான அரசியல்வாதிகளுள் குப்தாவும் ஒருவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் நீதிபதி.

கடந்த 1996 முதல் 1998 வரையான காலகட்டத்தில், தேவகெளடா மற்றும் குஜ்ரால் அமைச்சரவைகளில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் இந்திரஜித் குப்தா.

“குப்தாவைப் போன்ற அரசியல்வாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறார்கள். இன்றைய நாளில், அனைத்தும் கூச்சல் சார்ந்ததாகவே உள்ளது; அறிவுசார்ந்ததாக இல்லை. எண்ணிக்கைதான் பெரிதாக பார்க்கப்படுகிறதே தவிர, தரம் அல்ல. இந்த நிலை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என்று மேலும் கூறினார்.