அரசியல் சாக்கடை இல்லை!:  கருத்தை மாற்றிக்கொண்ட கமல்

ரசியல் சாக்கடை என்று கூறிய கமல் தற்போது அரசியல் சாக்கடை அல்ல என்று தனது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், கமல் தான் பேசிய வீடியோ ஒன்றில், அரசியல் ஒரு சாக்கடை என்று பேசினார்.

அந்த வீடியோவில், “சாதி அரசியலுக்கு நிகரான கொடுமை என்ன தெரியுமா? பழகிப்போன அரசியல்! அதென்ன பழகிப்போன அரசியல்?  ஓட்டுக்கு காசு வாங்க பழகிட்டோம், கறைவேட்டி கட்டியவன்தான் அரசியல்வாதி என்று பழகிட்டோம், விவசாயி எக்கேடு கெட்டால் நமக்கென்ன நமக்கு சாப்பாடு கிடைச்சா போதும்னு பழகிட்டோம்,  சாப்பாடு எங்கிருந்து கிடைச்சா என்ன என்று பழகிட்டோம்..  இப்படியே விட்டால் நாடு என்ன ஆகும்? சாக்கடை ஆகும். அந்த நாத்தமும் பழகிட்டோம் என்று பெருமையாக சொல்லிக்கப்போறோமா? அந்த நாத்தத்தை மாத்துவோம்! அதை மாத்துறதுக்கு யாரோ வருவோம் என்று நினைக்க வேண்டாம் நானும் நீங்களும்தான் மாத்தணும்.. நான் ரெடி நீங்க ரெடியா.. ரெடின்னா வாங்க..”  என்று பேசினார்.

இப்படி, “அரசியல் ஒரு சாக்கடை. அதை மாற்ற ஒன்று சேருவோம்” என்று பேசிய கமல், நேற்று “அரசியல் சாக்கடை அல்ல. ஏனென்றால் நாங்களும் அரசியலில் இருக்கிறோம்” என்று கூறினார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், அளித்த பேட்டி:

கே: திருமணத்துக்கு வெளியிலான உறவு குற்றமல்ல என்ற  உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி?

ப: அதை வரவேற்கிறேன். கலாச்சாரம் 50 வருடங்களுக்கு ஒருமுறை மாறும்.

கே: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2, 4 அமாவாசைக்குள் கமல் கட்சி காணாமல் போய்விடும் என்று பேசியிருக்கிறாரே?

ப: அவர்களுக்கு வைக்க வேண்டிய கெடு அதிகமாக உள்ளது. அவர்கள் ‘அம்மா’வாசைக்கு பிறகு வந்தவர்கள்.

கே: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?

ப: இல்லை.

கே:- அரசியல் ஒரு சாக்கடை என்பதை ஒப்புக் கொள்வீர்களா?

ப:- மாட்டேன். ஏனென்றால் நாங்களும் அரசியலுக்கு வந்திருக்கிறோம். ஒரு அதிகாரி செய்த தவறுக்கு, ஒட்டுமொத்த ராணுவத்தை குற்றம் சொல்ல கூடாது; அதை, நான் ஏற்க மாட்டேன். கெட்ட வர்கள், அரசில் மட்டுமின்றி, எல்லா துறை யிலும் இருக்கின்றனர்

கே: மக்கள் நீதி மய்யத்திற்கு வரவேற்பு இல்லை என்று அமைச்சர்கள் பேசுவது?

ப: மக்கள் நீதி மய்யத்திற்கு மக்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். தினமும் செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் அது தெரிந்திருக்கும்.

 

கே: கிராம சபை கூட்டத்திற்கான விழிப்புணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது?

ப: ‘மக்கள் நீதி மய்யம்’ கிராமசபை கூட்டங்களின் அவசியத்தை முன்னெடுக்கும். அக்டோபர் இரண்டாம் தேதி கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்னரே தண்டோரா இசைக்கும் கடமை அரசுக்கு உள்ளது.

ஆனால் அது முறையாக நடத்தப்படுவது கிடையாது. கிராம சபை கூட்டத்தில் வெற்றி கிடைத்ததாக நம்புகிறோம். ஆனால் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகல் எங்களுக்கு கிடைப்பதில்லை. அது கிடைக்க வேண்டும். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறேன்.

You may have missed