புதுடில்லி: அரசியலுக்கு அறிவார்ந்த இளைஞர்கள் தேவை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பட்டமளிப்பு விழாவில் தெரிவித்தார்.

குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு  விழாவில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.

2016-17, 2017-18 மற்றும் 2018-19 கல்வியாண்டுகளுக்கு பல்கலைக்கழகம் 68,662 பட்டங்களை வழங்கியது. இதில் 108 பிஎச்டிக்கள், 11,683 முதுகலைப் பட்டங்கள், 55,367 இளங்கலை பட்டங்கள், 542 எம்பிபிஎஸ் பட்டங்கள், 108 பி.டி.எஸ் பட்டங்கள், 656 எம்.டி / எம்.எஸ் பட்டங்கள், 122 டி.எம் / எம்.சி.எச் பட்டங்கள் 76 எம்.பில் பட்டங்கள் ஆகியவை அடங்கும்.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், “உங்களுடைய அனைத்தையும் நாட்டிற்கு வழங்க நீங்கள் தயாராக இருந்தால், அரசியலில் சேர உங்களை அழைக்கிறேன். இந்த நாட்டின் இளைஞர்கள் அரசியலுக்குத் தேவைப்படுகிறார்கள். அரசியலுக்கு அறிவார்ந்த இளைஞர்கள் தேவை”, என்றார்.

இருப்பினும், பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஒரு அறிவுரை வார்த்தையாக, “நீங்கள் அரசியலை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ள விரும்பினால் அதில் சேர வேண்டாம்”, என்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், டெல்லியில் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் தனது அரசாங்கத்தின் கீழ் மேம்பட்டுள்ளன என்று முதல்வர் கூறினார்.