பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

புவனேஸ்வர்:

ஒடிசாவில் பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐஏஎஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.


கடந்த வாரம் ஒடிஷாவில் தேர்தல் பிரச்சாரத்துக்காக தனி விமானத்தில் பிரதமர் மோடி வந்திறங்கினார். கர்நாடகாவில் 1996-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி முகமது மொஷின், ஒடிஷாவில் சாம்பல்பூர் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் வந்த ஹெலிகாப்டரை சோதனை நடத்தினார். இதனால் பிரதமர் பயணம் 15 நிமிடங்கள் தடை பட்டதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் பார்வையாளர் முகமது மொஷினின் நடவடிக்கையால் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக, பாதுகாப்புப் படையினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, முகமது மொஷினை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது.

இந்த நடவடிக்கையை எதிர்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. இந்நிலையில், முகமது மொஷின் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தேர்தல் பார்வையாளர் முகமது மொஷினை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

கர்நாடக முதல்வர், ஒடிஷா முதல்வர் ஆகியோரது வாகனங்கள்கூட தேர்தல் பார்வையாளர்களால் சோதிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் இருப்பதை, தேர்தல் பார்வையாளர் தம் கடைமையை செய்தபோது சுட்டிக்காட்ட முடியாது. எனினும், பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை தொலைவிலிருந்து கேமிரா மூலம் தேர்தல் பார்வையாளர் பதிவு செய்தார் என்ற சிறப்பு பாதுகாப்புப் படையின் புகாரை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரத்திலேயே, தேர்தல் பார்வையாளர் முகமது மொஷினை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. எனினும், தேர்தல் பார்வையாளர் தவறு செய்திருந்தால் கர்நாடக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மேலும், அடுத்தகட்ட உத்தரவு வரை அவர் தேர்தல் பணியில் ஈடுபடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.