டில்லி:

வேட்பாளர்கள் தங்களது மனைவி, குழந்தைகளின் வருமான ஆதாரங்களை தெரியபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் தங்களது சொத்து விபரங்களை வேட்பு மனுவில் தெரிவிக்க வேண்டும். அதோடு வருவாய் ஆதாரங்களையும் வேட்பாளர்கள் தெரியபடுத்த உத்தரவிட வேண்டும் என தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிடுகையில்,‘‘ வேட்பாளர்கள் அவருடைய வருமான ஆதாரங்களை தெரியப்படுத்த வேண்டும். மேலும் வேட்பாளரின் வாழ்க்கை துணை மற்றும் அவரை சார்ந்தவர்களின் வருவாய் ஆதாரங்களையும் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது.

26 லோக்சபா எம்.பி.க்கள், 11 ராஜ்யசபா எம்.பி.க்கள், 247 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் தேர்தல் அபிடவிட்டில் தெரிவித்திருந்ததை விட அதிகரித்துள்ளது என்று லக்னோவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக 7 எம்.பி.க்கள் 98 எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடைபெற்றது வருகிறது. வருமான வரித்துறை மேற்கொண்ட விசாரணையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் அதிகரித்திருப்பது கண் டுபிடிக்கப்பட்டது. 9 லோக்சபா எம்.பி.க்கள், 11 ராஜ்யசபா எம்.பி.க்கள், 42 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் மதிப்பீடு பணிகள் நடைபெறுகிறது என்று மத்திய நேரடி வரி வாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.