ஒரே நாளில் 17 பேரணிகள் : தீவிரமாகும் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரம்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 200 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 11 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளன. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, உபி மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஒட்டி நேற்று ஒரே நாளில் இம்மாநிலத்தில் 17 பேரணிகள் நடைபெற்றுள்ளன. பிரதமர் மோடி பில்வாரா, கோடா மற்றும் துர்காபூர் ஆகிய இடங்களில் நடந்த பேரணியில் பங்கேற்றுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொக்ரான், ஜலோர் மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களில் நடந்த பேரணியில் கலந்துக் கொண்டுள்ளார். அதற்கு முன்பு அவர் ஆஜ்மீர் மற்றும் புஷ்கர் ஆகிய இடங்களுக்கு சென்றிருந்தார்.

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜஸ்தானில் உள்ள நகௌர், சிகார், சுரு, பிகானேர் மற்றும் ஜல்சல்மார் ஆகிய இடங்களில் நடந்த பேரணியில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.

இதைப் போல ராஜ்நாத் சிங் மற்றும் மாயாவதியும் தலா இரு பேரணிகளில் கலந்துக் கொண்டுள்ளனர்.