பொள்ளாச்சி: கல்லூரி மாணவியை கொலை செய்த புகாரில் இளைஞர் கைது..!

கோவை:

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில். இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து, கோவை துடியலூர் சிறுமி பாலியல் கொலை செய்த விவகாரம் அடங்குவதற்குள் மீண்டும் பொள்ளாச்சி அருகே இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்பவருடைய மகள் பிரகதி. இவர் கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் திடீரென மாயமானார்.

அவர் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால்,  மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காட்டூர் போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.

இதற்கிடையே, பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி பிரகதி பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தில் சதீஷ் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.