பொள்ளாச்சி:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை  கைது செய்யக்கோரி தி.மு.க. மகளிர் அணி சார்பில் போராட்டம் நடந்திய கனிமொழி எம்.பி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்யக்கோரி தி.மு.க. மகளிர் அணி சார்பில், தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் பொள்ளாச்சியில் ஜனவரி 10ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்க கோவை விமான நிலையத்திலிருந்து பொள்ளாச்சியில் போராட்டம் நடைபெறவுள்ள இடத்திற்கு சென்று கொண்டிருந்த கனிமொழி எம்.பி., மற்றும் தி.மு.க.வினர் கற்பகம் கல்லூரி அருகே வந்த போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து சாலையில் அமர்ந்த கனிமொழி எம்.பி., தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும், அருளானந்தத்தை அதிமுக காப்பாற்றியதற்கு காரணம் அவருக்கும் மேலே இருப்பவர்களை பாதுகாக்கத்தான்; பொள்ளாச்சி பாலியல் கொடூரக் குற்றவாளிகள் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.