சென்னை:

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர்  மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக  திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதற்கிடையில், குற்றவாளியான  திருநாவுக்கரசிடம் நடைபெற்ற விசாரணையின்போது, அவர்  அளித்த வாக்குமூலத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரின் பெயர் இடம்பெற்று உள்ளதாக  கூறப்படுகிறது.

மயூரா ஜெயக்குமார் காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவரை சந்தித்து திருநாவுக்கரசு வாழ்த்து தெரிவித்ததாக  கூறப்படுகிறது. இதன் காரணமாக மயூரா ஜெயக்குமாருக் கும், திருநாவுக்கரசுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரிக்க, விசாரணைக்கு ஆஜராகு மாறு  சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

சம்மனில் வரும் 25ஆம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும்படி  கூறப்பட்டு உள்ளது.

மயூரா ஜெயக்குமார் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர். இவர், சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.