பொள்ளாச்சி:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என கோவை எஸ்பி. பாண்டியராஜன் கூறியுள்ளார்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.

தன் நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி, அந்த பெண்ணை கடந்த 12-ம் தேதி காரில் அழைத்துச் சென்றார் திருநாவுக்கரசு. வழியில் காரில் ஏறிக் கொண்ட அவரது நண்பர்கள் அந்த பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம்பிடித்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து நகையை மிரட்டி வாங்கியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த அந்த பெண், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 40-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்களை கைப்பற்றினர்.இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு திருப்பதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த கும்பலால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசியல் அழுத்தம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று பேட்டியளித்த கோவை எஸ்பி, பாண்டியராஜன், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடபாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காவல்துறை இந்த வழக்கை முறையாக விசாரித்த வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், உரிய நடவடிக்கை எடுப்போம்.
காவல் துறை கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கிறது.

குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனையை பெற்றுத் தருவோம்.இந்த வழக்கில் அரசியல் அழுத்தம் ஏதும் இல்லை” என்றார்.