கோவை:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என, தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மயூரா ஜெயக்குமார்

தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பொள்ளாச்சியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு   குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கூட்டத்துக்கு தலைவனாக கருதப்படும் திருநாவுக்கரசை சிபிசிஐடி காவல்துறையினர், போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் சிபிசிஐடி விசாரணைக்க ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரான மயூரா ஜெயக்குமார், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “பொள்ளாச்சி சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என சிபிசிஐடி அதிகாரிகளிடம் எழுத்துபூர்வ விளக்கமளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பில்லை” எனவும் கூறி உள்ளார்.