சென்னை:

மிழகத்தை குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியம் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் தலைவனான திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவம்  தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி ஒரு இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோரை  காவல்துறை யினர் கைது செய்தனர். இதுதொடர்பாக தமிழகஅரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வந்த வேளையில்,  புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரணை செய்த சிபிசிஐடி போலீசார் இந்த பாலியல் வழக்கில்  மணிவண்ணனையும் சேர்த்து வழக்கு பதிவு செய்தது.

மேலும், இந்த கேலவமான சம்பவத்தில் அதிமுக, திமுக கட்சியினரும் சம்பந்தப்பட்டிருப்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து,  கடந்த மாதம்  பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சிபிஐ போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இநத் நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுக்கு சொந்தமான சின்னப்பன் பாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிபிஐ போலீசார்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த வீட்டில் வைத்துதான் பாலியல் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. வீடியோ பதிவுகளும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சிபிஐ அதிகாரி கருணாநிதி தலைமையிலான 4 சிபிஐ அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். மேலும்,  அருகில் வசிக்கும் பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.