பொள்ளாச்சி விவகாரம் வழக்கு: எஸ் பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்! தமிழகஅரசு

கோவை:

கோவை எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்து உள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட கோவை மாவட்ட (ஊரகம்) கண்காணிப் பாளர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு உத்தரவிட கோரியும், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து, தமிழகஅரசு பதில் மனுதாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், புகார் கொடுத்த பெண்ணின் பெயர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களை ஊடகங்களில் வெளியிட்டார் கோவை எஸ்.பி. பாண்டிய ராஜன்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெயரோ, புகைப்படமோ  வெளியிடக்கூடாது என நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில், எஸ்.பி.பாண்டியராஜனின் செயல் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது.

இதுதொடர்பான வழக்கில் இன்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி பாண்டிய ராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.