பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக மாணவர்அணி செயலாளர் உள்பட 3 பேர் கைது

பொள்ளாச்சி: தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதில் பொள்ளாச்சி மாவட்ட அதிமுக  மாணவர் அணிச்செயலாளர் அருளானந்தம் என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, பொள்ளாச்சி பகுதியில்  இளம்பெண்கள், குடும்பத்தலைவிகள் உள்பட ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதற்காக பொள்ளாச்சியை சேர்ந்த  திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்ததால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் சென்றது.  கடந்த இரண்டு வருடமாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென 3 பேரை சிபிஐ கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரை பொள்ளாச்சியில் நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்ட்ட பொள்ளாச்சியை சேர்ந்த 3 பேரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மருத்துவபரிசோதனைக்குப் பிறகு கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் அருளானந்தம் என்பவர்  அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ஆக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed