சென்னை:

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான  குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக பல மாவட்டங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

குலை நடுங்க வைக்கும்  பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு  பீகார் மாநிலம் முசாஃபர்பூர் ஆதரவற்ற பெண்கள் விடுதியில் வசித்த சுமார் 40 சிறுமிகள் பாலியன் வன்கொடுமையில் சிக்கி சின்னாப் பின்னமாக்கப்பட்டது போல, தற்போது பொள்ளாச்சியில், பள்ளிச்சிறுமிகள் முதல் குடும்ப பெண்களை வரை சுமார் 200க்கும் மேற்பட்டோரை முகநூல் நட்பு மூலம் தங்களது வலையில் வீழ்த்தி,  சிக்கி சீரழித்து, அவர்களிடம் இருந்து பணமும் பறிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில் பின்னணியில், திமுக, அதிமுக கட்சிகைளை சேர்ந்த பெருந்தலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொடுமையான சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலுப்பெற்று வருகின்றன.

பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து பல அரசியல்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் வேளை யில்,  நேற்று நெல்லை, திருச்சி  சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட பல கல்லூரிகளில் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவ மாணவிகள்  பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கவும் கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள  நந்தனம் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கல்லூரியை விட்டு வெளியே வர  முயன்றபோது, காவல்துறையினர் தடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் கல்லூரியின் மேயின் கேட்டை பூட்டி, மாணவர்கள் வெளியேறாதவாறு தடுத்து வருகின்றனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறாதவாறு வாயிற்கதவுகள் அடைக்கப்பட்டு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதானவர்களுக்கு மரண தண்டனை வழங்க வலிறுத்தி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். எம்.ஐ.இ.டி(.MIET) கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தூத்துக்குடியில் வ.உ.சி.கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கல்லூரி வாயிலின் முன்பு அமர்ந்து தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவ-மாணவிகள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கல்லூரி மாணவ- மாணவிகளின் இந்த திடீர் போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பான சூழல் நிலவியது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி சம்பத்தை கண்டித்து உடுமலையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறையான விசாரணை நடத்தி குற்றச்செயலலில் ஈடுபட்ட அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 1000 பேர் கல்லூரி வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோல தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கல்லூரி மாணவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருவதால் மாணவ மாணவிகள் கல்லூரிக்குள் இருந்தே தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் பரவி வருவது காரணமாக தமிழக அரசு கலக்கம் அடைந்துள்ளது.