கொல்கத்தா:  மேற்கு வங்க மாநில சட்டமன்றதேர்தலுக்கான  5-ம் கட்ட  வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையிலேயே ஏராளமானோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்னர். வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, இதுவரை 4 கட்ட தேர்தல்கள்  135 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ளன. இன்று 5வது கட்டமாக 45 தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் ஜல்பாய்குரி மற்றும் வடக்கு 24 பா்கானாக்கள் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 45 தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இவர்களில் 39 பேர் பெண்கள்.  வாக்குப்பதிவுக்காக  15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த தொகுதிகளில் 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  கொரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

6-ம் கட்ட வாக்குப்பதிவு 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்ட வாக்குப்பபதிவு  36 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதியும், கடைசியாக 8-ம் கட்ட வாக்குப்பதிவு  35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசார நேரம் இரவு 7 மணியாக குறைக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரவு 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை எந்த பிரசாரமும் மேற்கொள்ள அனுமதி இல்லை எனவும், வாக்குப்பதிவுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பே பிரசாரங்களை முடித்து கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.