ஸ்டெர்லைட் ஆலையால் மாசு: பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி

டில்லி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது என்று மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று  அந்த பகுதி  மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அப்போது மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து  காவல்துறையினர் கண்மூடித் தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்,  13 பேர் மரணம் அடைந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பெரும் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.  தமிழக அரசின் முடிவை எதிர்த்து, ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஏற்கனவே நடைபெற்ற 2 கட்ட விசாரணையின்போது,  ஆலையை திறக்க உத்தரவிட மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இன்றைய உத்தரவில், ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள லாம் என்றும், மாசு கட்டுப்பாடு வாரியங்கள்  அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது,.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது,  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உறுதி என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையானது, கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது என தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஆலையை ஆய்வு செய்ய மேலும் 2 வார கால அவகாசம் தேவை எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தநிலையில், அதனை பசுமை தீப்பாயம் நிராகரித்துள்ளது.

ஆனால், வேதாந்த நிறுவனம் தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க தேவையான நிபுணர்கள் குழு தமிழக அரசிடம் இல்லை என்றும் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை முறையாக பாதுகாக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். கந்த அமிலத்தை பாதுகாக்காவிட்டால் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.  தமிழக அரசு ஆலைக்குள் நுழைய அனுமதி அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு,  ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க திறமையான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே ஆய்வு செய்து அமிலங்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மேலும் ஆலையை ஆய்வு செய்ய 2 வார கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முன் வைத்தது. ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அந்த கோரிக்கையை நிராகரித்தது.