வுஹானில் சர்வதேச விசாரணைக்கு சீனா அனுமதிக்க வேண்டும் : அமெரிக்கா கோரிக்கை

வாஷிங்டன் :

கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த சர்ச்சையும் பாதிப்பும் தொடர்கதையாக நடந்துவரும் வேலையில்.

அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் வுஹான் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்திற்குள் சீன அரசு விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பாம்பியோ கோரிக்கை வைத்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா விடுத்த இதுபோன்ற ஒரு கோரிக்கையை ஏற்க மறுத்த சீன அரசு தொற்றுநோய் குறித்த பிரச்னையில் சீன அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதாக கூறியது.

இதனை தொடர்ந்து மீண்டும் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்காவின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய பாம்பியோ, சீனா நம்பகமான நாடாக இருக்க வேண்டுமென்றால் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து தனது வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.

சீனாவின் நடவடிக்கையை பொறுத்தே அதன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தெரியவரும் என்றும் கூறினார். ஏற்கனவே, உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அந்த அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.