புதுச்சேரியில் பரபரப்பு: கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து பூட்டிய சட்டக்கல்லூரி மாணவர்கள்

புதுச்சேரி:

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவே ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று சட்டக்கல்லூரி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் கிரண்பேடியை, சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குள் வைத்து,  கேட்டை மூடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி  காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் ஆய்வு செய்வதற்காக கிரண் பேடி இன்று வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்  12.50 மணிக்கு  வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முன் கூட்டியே 11.45 மணிக்கே சட்டக்கல்லூரிக்கு வந்தார். நேராக  முதல்வர் அறைக்கு சென்ற அவர், முதல்வர் மற்றும் பேராசிரியருடன் மழைநீர் சேகரிப்பு பற்றி பேசினார்.

பின்னர் ஆய்வு செய்வதற்கு புறப்பட்டார். அப்போது ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு கவர்னரை சந்திக்க வந்தனர். அவர்கள் கல்லூரி விடுதியிலும், கல்லூரியிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவற்றை செய்து தரும்படி கவர்னரிடம் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு கவர்னர் நான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று கூறி மாணவர்களின் குறைகளே கேட்க மறுத்தார்.  இதன் காரணமாக கோபம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவர்கள், நீங்கள் எல்லா வி‌ஷயங்களிலும் தலையிடு கிறீர்கள். எங்கள் கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற ஏன் மறுக்கிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கவர்னருக்கு பாதுகாப்பாக வந்த காவல்துறையினர், மாணவர்களை கிரண்பேடி அருகே நெருங்க விடாமல் தடுத்து வந்தனர். மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த கிரண்பேடி அங்கிருந்து வெளியேற முயற்சி செய்தார். ஆனால், மாணவர்கள் கேட் அருகே  தங்களது மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி கவர்னர் அங்கிருந்து சென்று விடாமல் தடுத்தனர்.  சில மாணவர்கள் மெயின் கேட்டை இழுத்து மூடினார்கள். இதனால் கவர்னரால் கல்லூரியை விட்டு வெளியே வர முடியவில்லை.

இதை தொடர்ந்து சட்டக்கல்லூரி வளாகத்துக்கு  கூடுதல் போலீசார்  குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். அதைத்தொடர்ந்து,  மெயின் கேட்டின் ஒரு பகுதியை மட்டும் போலீசார் வலுக்கட்டாயமாக திறந்தனர். அதன் வழியாக ஆளுநர் கார் வெளியே சென்றது.

இந்த சம்பவம் காரணமாக சட்டக்கல்லூரியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.