பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க ஒப்புதல்: புதுச்சேரி அரசு தகவல்

புதுச்சேரி:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்தவரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக திகழ்ந்தவருமான டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி, அவரைச் சிறப்பிக்கும் வகையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க மாண்புமிகு முதலமைச்சர் திரு.வே.நாராயணசாமி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

அவரின் கோரிக்கையினை ஏற்று பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் டாக்டர் லைஞர் மு.கருணாநிதி இருக்கை என்ற பெயரில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டல்நலம் இல்லாமல் கடந்த  2 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்டு 7ந்தேதி மரணமடைந்தார். அவரை கவுரப்படுத்தும் வகையில், புதுச்சேரியில் அரசு சார்பில் வெண்கலச் சிலை அமைக்கப் படும் என்றும்,   புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  கலைஞர் டாக்டர் கருணாநிதி பெயரில் இருக்கை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  காரைக்கால் புறவழி நெடுஞ்சாலைக்கு கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் மாற்றப்பபடும் என்றும் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.