போக்சோ சட்டத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

புதுச்சேரி

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி நகரில் உள்ள வெங்கடா நகர் 4 ஆம் குறுக்கு தெருவில் வசிப்பவர் 66 வயதான சாந்தரூபன். ப்ரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர் பிரான்சில் கணித பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். சாந்தரூபன் கடந்த 2002 முதல் புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அங்கு ஆதரவற்ற 22 சிறுவர் சிறுமியர் தங்கி உள்ளனர். இவர்களில் தாய் தந்தையரால் கவனிக்க முடியாத சிறார்களும் உண்டு. இந்த சிறார்கள் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இங்கு தங்கி உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை நடந்து வருவதாக புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார்கள் வந்தன.

குழுவைச் சேர்ந்தவர்கள் சாந்தரூபனின் காப்பகத்துக்கு திடீர் வருகை புரிந்து அங்குள்ளவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது இரு சிறுமிகள் தங்களுக்கு சாந்தரூபன் பாலியல் தொல்லை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் புகார் பந்திந்த காவல்துறையினர் பொக்சோ சட்டத்தின் கீழ் சாந்தரூபனை கைது செய்துள்ளனர். தற்போதுஅவர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.