சட்டப்பேரவைக்கு போதைப் பொருட்கள் கொண்டு வந்த அதிமுக எம் எல் ஏ க்கள்

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்துக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் போதைப் பொருட்களை எடுத்து வந்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகம் விற்பனை ஆவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.   கல்லூரி, ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட  பல இடங்களுலும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை நடந்து வருவதாக பரவலாக பேசப் படுகிறது.  இது குறித்து சட்டப்பேரவையில் புகார் அளிக்க இத்தகைய பொருட்களை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ளனர்.

சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன், “சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்கள் உள்ளதாக கூறப்பட்ட போதிலும் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகமாக உள்ளது.     இதனால் 13 முதல் 25 வயதான இளைஞர்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர்.  குறிப்பாக கல்வி நிலையங்கள் அருகே இவைகளின் விற்பனை நடக்கிறது.   அது மட்டுமின்றி பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களிலும் அதிகமாக விற்கப்படுகிறது” என தெரிவித்தார்.

இதற்கு முதல்வர் நாராயணசாமி, “ நாங்கள் ஆட்சி அமைத்த பின் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.   லாட்டரி டிக்கட்டுகள், கஞ்சா உள்ளிட்டவைகளின் விற்பனை தொடர்பாக எழும் புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்கிறோம்.     பல இடங்களில் கஞ்சா சோதனைகள் நடைபெற்று கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”  என பதிலளித்தார்.

கார்ட்டூன் கேலரி