நிதி கோரி 17 முறை கடிதம் எழுதியும் கண்டுகொள்ளாத பிரதமர், நிதியமைச்சர்:புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: மாநிலத்துக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு 17 முறை நான் கடிதம் எழுதியுள்ளேன், ஆனால் பிரதமரும், நிதியமைச்சரும் இதுவரை பதில் சொல்லவில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரும் 2ம் தேதி வரை வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இன்று சோனியா காந்தி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது. அதில் பிரதமருக்கு 17 முறை நான் கடிதம் எழுதியுள்ளேன், மாநிலத்துக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி இழப்பு தொகையை கொடுக்க வேண்டும், மார்ச் 24ம் தேதி முதல் கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்ட காரணத்தால் இழப்பீடு கொடுக்க வேண்டும், கொரோனாவை தடுத்து நிறுத்த தேவையான மருத்துவ உபகரணங்கள், வெண்டிலேட்டர் உள்ளிட்டவை வாங்க மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தோம்.

அதற்கு பிரதமரும், நிதியமைச்சரும் இதுவரை பதில் கூறவில்லை. ஆனால், அதற்கு மாறாக மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஆதாரத்தை கொடுக்காமல் விலைவாசியை உயர்த்துகின்றனர்.

இப்போது பெட்ரோல், டீசல் விலையை தினமும் உயர்த்துகின்றனர். இது மக்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்துகிறது. சோனியா காந்தியும் மத்திய அரசுக்கு 6 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் கோடி பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் கிடைத்துள்ளது. அந்த பணத்தை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுபற்றி மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் கொடுக்க மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு இலவச அரிசி திட்டத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளோம் என்று கூறினார்.