புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான விற்பனை சரிந்துள்ளதால் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் புதுச்சேரியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றுதான் கடைகள் திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் நேற்று கூட்டம் காணப்பட்டது.
2வது நாளான இன்று காலை 10 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்பட்டன. ஆனாலும் பல கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மதுபானங்களின் விலை 200 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால் உள்ளூர் மதுபிரியர்கள் சரக்குகளை வாங்க வரவில்லை.
கொரோனா காரணமாக அண்டை மாவட்ட எல்லைகள் மூடல், சுற்றுலா பயணிகளுக்கு தடை  ஆகிய காரணங்களால் மதுக்கடைகள் வெறிச்சோடின. மதுக்கடைகளில் 2வது நாளாக காலை முதல் பெரிய அளவில் எந்த வியாபாரமும் நடக்கவில்லை என்று கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வியாபாரத்தை பொறுத்தவரை புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகளின் திறப்பின் முதல்நாளான நேற்றைய வசூல் ரூபாய் 3 கோடியே 83 லட்சம் ஆகும்.  புதுச்சேரியில் 3கோடியே 23லட்சத்து 73 ஆயிரம், காரைக்காலில் 59 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் என மொத்த வசூல் – 3 கோடியே 83 லட்சத்தை எட்டியது.
2வது நாளான இன்றைய 2 மணி வரை விற்பனையின் படி, 1 கோடியே 14 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. புதுச்சேரியில் 99 லட்சத்துக்கும், காரைக்காலில் 15 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.