புதுச்சேரி: நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 4ம் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்தது.
அதைத் தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இந் நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையொட்டி புதுவையிலும் மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக முடிவு செய்ய கடந்த 18ம் தேதி புதுவையில் அமைச்சரவை கூட்டம் கூடியது.  இதில் 20ம் தேதி மதுக் கடைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
இதனையடுத்து இன்று கலால்துறை அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம், ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  நாளை முதல் புதுச்சேரியில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
அடுத்த 3 மாதங்களுக்கு மதுபானம் மீது 25 % கொரோனா வரி விதிக்கப்படும் என தெரிவித்த அவர், 154 வகை மதுபானங்கள் தமிழகத்தில் விற்கப்படும் விலையே புதுச்சேரியிலும் விற்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஒரு நபர் 4 1/ 2 லிட்டர் வரை மதுபானம் வாங்கிக்கொள்ளலாம் என அமைச்சர் நமச்சிவாயம் குறிப்பிட்டுள்ளார்.