பொங்கல் பண்டிகை : ஒரு சிறப்புக் கண்ணோட்டம்
சென்னை
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை குறித்த ஒரு சிறப்புக் கண்ணோட்டம்
இந்தியத் துணைக்கண்டத்தில் தென் இந்தியாவில் தமிழகத்தில் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை வெவ்வேறு பெயர்களில் உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்பட்ட போதிலும் தமிழக மக்கள் இதை நான்கு நாட்கள் கொண்டாடி வருகின்றனர்.
சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்வதாக கருதப்படும் உத்தராயணம் பொங்கலில் இருந்து தொடங்குகிறது. ஜனவரி மாதம் இடையில் வரும் இந்த பண்டிகை விவசாயிகள் தங்கள் விவசாயத்துக்கு உதவிய சூரியன், மழைக்கடவுள், மாடுகள் உள்ளிட்டவற்றுக்கு பூஜை செய்து நன்றியைத் தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் இந்தப் பண்டிகை இன்று தொடங்குகிறது. இந்த பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புதியதாக அறுவடை செய்த அரிசியில் செய்யப்பட்ட பொங்கல், கரும்பு, உள்ளிட்டவைகள், மற்றும் கோல அலங்காரம், ஜல்லிக்கட்டு, எனப் பல சிறப்புக்கள் இந்த நான்கு நாட்களில் உண்டு.
முதல் நாள் போகிப் பண்டிகை இந்திரனுக்கு படையலிடும் தினமாகும். மழையைப் பெய்ய உதவிய இந்திரனுக்கு மார்கழி மாதம் குளிரும் என்பதால் போகி நெருப்பை எரித்து அவருக்கு நன்றி தெரிவிக்க மேளம் இசைப்பது வழக்கமாக இருந்தது. இதற்காக விவசாயக் கழிவுகளை எரித்து வந்தனர். தற்போது பழைய குப்பை கூளங்களை எரிப்பது வழக்கமாக உள்ளது.
இரண்டாம் நாள் தைப்பொங்கல் என அழைக்கப்படுகிறது. புதிய அரிசியுடன் பால் வெல்லம் சேர்த்து செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் சூரியனுக்குப் படைக்கப்படுகிறது. இது புது மண் பாண்டங்களில் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து சமைப்பது வழக்கமாகும். பொங்கல் பானையில் மஞ்சள் கொத்தை கட்டி அலங்கரிப்பது வழக்கமாகும்.
மூன்றாம் நாளான மாட்டுப்பொங்கல் என்பது கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகும். விவசாயிகளின் முக்கிய உறவினர்கள் என கருதப்படும் கால்நடைகளுக்கு மாலை, மணிகள் சூட்டி அலங்கரித்துப் பொங்கல் சமைத்து உண்ண அளிப்பார்கள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த நாளில் நடைபெறும். காளை மாட்டு வண்டிப் பந்தயமும் நடைபெறுவது உண்டு.
நான்காம் நாளான காணும் பொங்கல் என்பது பெயருக்கு ஏற்றபடி காணச் செல்வதாகும். வருடம் முழுவதும் உழைத்த விவசாயி தனக்கு உதவிய குடும்பத்தினருடன் வெளியே சென்று கூட்டமாகச் சேர்ந்து உணவருந்தி மகிழ்வார். பொதுவாக இந்த தினத்தில் பலரும் கடற்கரை, பொருட்காட்சி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவசாயத்துக்கு உதவியவர்களுக்கு நான்கு நாட்கள் விழா எடுப்பது கிடையாது என்பதால் இது தமிழர் திருநாள் எனப் போற்றப்படுகிறது.