சிறப்பு (சிறு) கட்டுரை: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி:

லகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

தமிழ்ப் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றுகிற விழா என்பதால், பொங்கல் திருவிழாவை ஒட்டி, கல்வி நிறுவனங்களுக்கு, 5 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு.

காரணம், காரியம் இரண்டையும் பாராட்டுகிறோம்.

இதனோடு கூடவே, இன்னொரு அறிவிப்பும் வந்துள்ளது.

பொங்கல் திருநாளை ஒட்டி, ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட, திரை அரங்குகளுக்கு அனுமதி!!!

ஏன் இந்த தமிழ்ப் பண்பாட்டு விரோத நடவடிக்கை? கடந்த சில பத்தாண்டுகளாகத் தொடரும் அவலம் எப்போது நீங்கப் போகிறது..?

மற்ற திருவிழாக்கள் போன்றது அல்ல – தமிழர் திருநாள்.

இயல்பில் இது ஒரு, சமூகத் திருவிழா. என்ன பொருள்…?

தீபாவளி, ஆயுத பூஜை, பிற சமயத்தாரின் பண்டிகைகள், சமயம் சார்ந்தவை; வழிபாடு, பூசை ஆகியன முக்கிய இடம் வகிக்கும்.

தவறு சொல்லவில்லை. இப் பண்டிகைகளின் இயல்பு அப்படி.

சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் ஆகியன தேசியத் திருவிழாக்கள். பள்ளி, கல்லூரிகளில் கொண்டாடப் படுகின்றன. வரவேற்கிறோம்.

பொங்கல் திருவிழா, இவற்றில் இருந்து மாறுபட்டது.

ஒரு சமூகமாக, மக்கள் அனைவரும் இணைந்து, இயற்கையை வணங்கி நன்றி தெரிவிக்கிற, தம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிற சமூகத் திருவிழா. (Community Festival)

வடக்கே ‘ஹோலி’, கேரளாவில் ‘ஓணம்’ ஆகியன சமூகத் திருவிழாக்கள்தாம். ஆனால், அவற்றின் நோக்கம், பொங்கல் பண்டிகையில் இருந்து வேறுபட்டது.

‘ஹோலி’, ‘ஓணம்’ ஆகிய பண்டிகை நாட்களில், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணி புரிவோர்… சந்தித்து அளவளாவி, தங்கள் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்கின்றனர்.

இந்த நாட்களில் அங்குள்ள மாநில அரசுகள், திரை அரங்குகளுக்கு எந்த சிறப்பு சலுகையும் அளிப்பது இல்லை.

என்ன காரணங்களை நாம் இட்டுக் கட்டி சொன்னாலும், இங்கெல்லாம் பல அரங்குகள் உண்மையில், பிற்பகல் வரை, திறக்கப் படுவது கூட இல்லை.

தமிழ்நாட்டில் மட்டும்தான், எல்லா ‘சிறப்பு’ நாட்களிலும், ‘சிறப்பு’ காட்சிகள் அனுமதிக்கப் படுகின்றன. ஏற்கனவே, வெட்டி மன்றங்கள், திரைத்துறையினரின் வெட்டிப் பேச்சுக்கள் என்று, தொலைக் காட்சி, பாரம்பரியத் திருவிழாக்களைக் கொச்சைப் படுத்தி விட்டது.

போதாக் குறைக்கு அரசாங்கமும் சேந்து கொண்டு மக்களை, அரத்தமற்ற கேளிக்கைகளுக்கு, உலகம் கண்டிராத அளவுக்கு, ஊக்கம் அளித்து வருகிறது.

மகாத்மா காந்தி, மகாவீரர் ஆகியோரின் கொள்கைகளுக்கு விரோதமானது என்பதால், இவர்களின் பிறந்த நாளன்று,

மதுக் கடைகளைத் திறக்க, அரசு தடை விதித்து விடுகிறது.

இதே நிலைப்பாடு, தமிழர் திருநாளுக்கும் வர வேண்டும்.

தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது என்பதால், பரஸ்பர சமூக சந்திப்பு, உரையாடல்கள், பரிமாறல்களைத் தடுக்கிறது என்பதால்,

தமிழர் திருநாளின் போது, திரை அரங்குகள், மூடப்பட வேண்டும்.

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் சேர்ந்து பழகிக் கொண்டாடுவதற்கு வசதிகள் செய்து தருவதுதான் ஒரு மக்கள் நல அரசின் கடமை.

அதை விடுத்து, பண்பாட்டைக் குலைக்கும், தீய வழக்கங்களுக்குத் துணை போவது, எதிர்கால சந்ததியர்க்கு, குறிப்பாக தமிழ்ப் பண்பாட்டுக்கு இழைக்கப் படும், மாபெரும் துரோகம்.

இன்னமும் கூட அவகாசம் இருக்கிறது.

தனது முடிவை மறு பரிசீலனை செய்து, உடனடியாக திரையரங்குகளுக்குத் தரப்பட்டு இருக்கும் சிறப்பு அனுமதியைத் திரும்பப் பெறுவது, நல்லது.

வரும் ஆண்டுகளில், தமிழர் திருநாள் கொண்டாட்டங்களின் போது, திரைப்படங்கள் வெளியிட, திரையிட, தடை விதிக்கப் பட்டால்,  தமிழ் இனம், மகிழ்ந்து கொண்டாடும்.

நம்புவோம் – என்றேனும் ஒரு நாள்,நல்லது நடந்தே தீரும்.