பொங்கல் பண்டிகை: 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் அறிவிப்பு!

சென்னை: 

பொங்கல் பண்டிகையையொட்டி 3,186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு சார்பில், தமிழக  காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் சிறப்பான  ஊழியர்களுக்கு ஆண்டுதோறும்  பொங்கலன்று தமிழக முதல்வர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு பதக்கங்கள் வழங்கப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழக காவல்துறையில் பணியாற்றும் 3000 பணியாளர்களுக்கு ‘தமிழக முதல்வர் காவல் பதக்கங்கள்’ வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை வார்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர் நிலைகளில் 60 பேர்களுக்கும் ‘தமிழக முதல்வரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச் சுருள் வழங்கப்படும்.

மேலும், காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ‘தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது.

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.

இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் இப்பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வரால் பதக்கம் மற்றும் பதக்கச்சுருள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.