சென்னை:

மிழகத்தில் இன்று முதல்  ‘ரூ.1000 உடன் பொங்கல் பரிசு பை’ இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டை கொண்டு சென்று குறிப்பிட்ட நாட்களில் வாங்கிக்கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு உள்ளிட்டவை அடங்கிய பரிசுத்தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து   10 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், இன்று முதல்  ரேஷன் கடைகளில்  ஆயிரம் ரூபாயுடன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படு கிறது.

இதையடுத்து சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள டி.யு.சி.எஸ். அலுவலகத்தில் பொங்கல் பரிசுதொகுப்பு தயார் செய்யும் பணியில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான ஏ.ஜி.சந்திரசேகர் இதனை மேற்பார்வையிட்டு வருகிறார்.

ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை தனித்தனி காகித பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வருகிறது. ‘பேக்கிங்’ செய்யப்பட்ட பொருட்கள் வேன்கள் மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அதேபோல பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்பு தேனாம்பேட்டை டி.யு.சி.எஸ். அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து வேன்கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய டி.யு.சி.எஸ். மேலாண்மை இயக்குனர் ஏ.ஜி.சந்திரசேகர், “டி.யு.சி.எஸ். நிர்வாகம் சார்பில் 25 சதவீத பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பணிகள் அந்தந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் விடப்பட்டிருக்கிறது. ஒரு தொகுப்பு தயாரிக்கும் பணிக்கு 60 காசுகள் வீதம் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது” என்றார்.

ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் தேதி வாரியாக ரேஷன் கார்டு எண்கள் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

சில ரேஷன் கடைகளில் தெருக்கள் அடிப்படையில் தேதி வாரியாக பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் கூட்ட நெரிசல் இன்றி தங்களுக்கு உரிய தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.