பொங்கல் பரிசுத் தொகுப்பு 4 நாட்கள் மட்டுமே: தமிழகஅரசு அறிவிப்பு!பொதுமக்கள் அதிருப்தி

சென்னை:

மிழகத்தில் ரூ.1000 பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், வரும் 9ந்தேதி முதல் 12ம்தேதி வரை 4 நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை  ஏற்படுத்தி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் 1 கிலோ பச்சரிசி மற்றும்  சர்க்கரையுடன் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 1000  வழங்கப்படும் என்று தமிழகஅரசு அறிவித்தது.

இதற்கிடையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் காரணமாக, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், தமிழக அரசு வரும் 9ந்தேதிதான் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 9-ந் தேதி முதல் தொடங்கி 12-ந் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பும், 1,000 ரூபாயும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். 1,000 ரூபாயை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக உறையில் வைக்காமல் வெளிப்படையாக வழங்க வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத்தொகை பெறாத விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு 13-ந் தேதி அன்று பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகையினை வழங்கி இப்பணியை முழுமையாக முடிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாயை பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாயவிலை கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கும் வகையில் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கடைகள் ஒரே இடத்தில் இயங்கினால் கூடுதலாக மேசை, நாற்காலிகள் அமைத்து, கூடுதல் பணியாளர்களையும் பணியமர்த்தி, கூட்டத்தை ஒழுங்குபடுத்த தேவைக்கேற்ப போலீசாரின் உதவியை யும் பெற்று பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெள்ளைநிற ரேஷன் அட்டை உள்ளவர்களும் பொங்கல் பரிசு பெறும் வகையில் தங்களது குடும்ப அட்டை களை சாதாரண அரிசி அட்டைகளாக மாற்றி உள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு கூடுதலாக பல ஆயிரம் பேருக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாயம் தமிழகஅரசுக்கு எழுந்துள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பரிசு  9ந்தேதி முதல் 12ந்தேதி வரை என 4 நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்து இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பிட்ட நாட்களில் ஏராளமானோர் ரேஷன் கடைகளில் குவிந்தால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  மேலும், 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை அறிவிக்கப்பட்ட  தினங்கள் வேலைநாட்கள் என்பதால், ஏராளமானோர் பணிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இதுபோன்ற வேலைநாட்களில் பொங்கல் பரிசை அவர்கள் வாங்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, தமிழக அரசு, பொங்கல் பரிசை  தற்போது இருந்தே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விடுமுறை தினங்களிலும் முழு நேரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.