சென்னை: பொங்கல் பரிசு பெறும் கால அவகாசத்தை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கடந்த 4ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை, மாலை வேளைகளில் தலா 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படுகிறது.

பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீள கரும்பு, 5 கிராம் ஏலக்காய், முந்திரி, திராட்சை தலா 20 கிராம் ஆகியன துணிப்பையில் வைத்து வழங்கப்படுகிறது. அதனுடன் ரூ.2,500 ரொக்கத் தொகை அளிக்கப்படுகிறது.

2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 963 குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசு தொகுப்பு அளிக்கப்படுகிறது. அரிசி அட்டைதாரா்கள் 2 கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 805 பேருக்கும், இலங்கை தமிழா்கள் 18 ஆயிரத்து 923 குடும்ப அட்டைதாரா்களுக்கும், அரிசி அட்டைகளாக மாற்றப்பட்ட 3 லட்சத்து 75 ஆயிரத்து 235 அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜனவரி 13ம் தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிலையில், அனைத்து மக்களுக்கும் விடுபாடின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பரிசு வழங்கும் தேதியை ஜனவரி 25ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள் வரும் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை அதை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.